May 21, 2009

'The Glory of the Divine Name' - நாம மஹிமை -- காஞ்சி மஹாஸ்வாமிகள்

His Holiness Sri Chandrasekarendra Saraswati Swamigal was the 68th Pontiff of the Kanchi Kamakoti Peetam. One of the most glorified saints the history has ever witnessed, He was a Realized Soul. Humility and simplicity were hallmarks of this great Avatara Purusha. Lovingly called as 'Maha Periyava' or 'Paramacharya', the Mahaswami ascended the Peetam in 1907 at the age of 13. Intensively educated in all the Vedas and Shastras, He was multi-lingual too. Throughout the century that He was in his mortal form, gracing the world, He traveled the length and breadth of the country by foot spreading the fragrance of Sanathana Dharma and the glory of the Vedas. A unique collection of His various lectures and discourses is compiled into volumes of literature entitled 'Deivathin Kural' ('The Voice of the Lord') in tamil. The article below is a small excerpt from the first part of these set of books. This goes to show how Maha Periyava extolled the power of the Divine Name.
நாம மஹிமை தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவன் நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கின்ற பழக்கமும் இருந்து வருகிறது. இந்த ஜீவாத்மாவானது அந்த பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று காணக்கிடைப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருக்கின்றது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள். கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம். தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும் குணங்களையும், லீலைகளையும் பாடி ஈஸ்வரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமூதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைக்கு உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தரவேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (individual basis) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறை (congregational worship) யும் இருக்கிறது. இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களயும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. "ரகுபதி ராகவ ராஜாராம்", "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே" என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான ஸங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவு கொள்ள முடிகிறது. பஜனைக்கூடம் என்ற ஓர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர ஸங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவன்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர ஸங்கீர்த்தனம் எனப்படுவது. விசேஷமாக மார்கழி மாததில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்ய நாமங்களைப் பரப்புவதுண்டு. இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளரவேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவன்நாமம் இல்லாமல் வெறுமையாக போகவிடக்கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம், எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாக போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது ராம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வொர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனை கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம். பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதினால் பகவானின் நாம ஸங்கீர்த்தனமும் பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. ஸ்ரீ பகவன்நாம போதேந்திரர்கள், ஸதானந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பரமேஷ்வரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ஹரி, சிவ முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமில்லை. மூர்த்தியை போல அவையும் ஸாக்ஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு. இவ்வாறு நாம ஸ்ங்கீர்த்தனத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தியான புனித கானங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மஹாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான ஸம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப்பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பது இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்த சிரமமான சாதனையும் செய்ய சக்தியும் சௌகரியமும் இல்லாத கலி காலத்தில், நாம ஸங்கீர்தனம் தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லி இருக்கிறது -- 'கலௌ ஸங்கீர்த்ய கேசவம்'. பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் -- அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்தனங்களைப் பாட வேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும். அவரவர்களும் தங்களுக்குறிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு ஏது இடம்? பெரிய ஸங்கீத ஞானம், ராக பாவம், சரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, 'அம்மா! அம்மா!' என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, ஸங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வ்யாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, க்ருஷ்ணா, சிவா, அம்பா, என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி இது. -காஞ்சி மஹாஸ்வாமிகள்
நன்றி: தெய்வத்தின் குரல்

No comments:

Linkwithin

Related Posts with Thumbnails